ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!

ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லமும் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்தார். வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உறுப்பினர்களாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்

வேதா நிலையத்தை பராமரிப்பதற்கும் அங்குள்ள சொத்துக்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நினைவிடமாக்குவதற்கான இழப்பீட்டுத் தொகையான 68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியதன் மூலம் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அதிகாரப்பூர்வாக அரசுடமையாக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா படித்த புத்தகங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் நினைவில்லத்தில் காட்சி படுத்தப்பட உள்ளன. நினைவில்லமாக மாற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் 27 ஆம் தேதி சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில்,  அதன் தொடர்ச்சியாக ஓரிரு நாட்களில் ஜெயலலிதா நினைவில்லமும் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன