
ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பழங்குனியினருக்கான தொகுதி ஆகும். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளாராக கு.சின்னதுரை அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஜீவா ஸ்டாலின் ஆதிதிராவிடரா? என்பதில் சர்ச்சை எழுந்தது. ஆத்தூர் அருகே புங்கவாடி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரிமுத்து உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் நேற்று ஒரு புகார் மனுவில் கொடுத்தனர்.
அதில் ஆத்தூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலினை அக்கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை. இவரது தாத்தா கோபால் (சமையலர்) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், அரிய பெருமானூர் கிராமம். கோபால் மகன் செல்வராஜின் மனைவி அங்கம்மாள். இவருக்கு பிறந்த பெண் தான் ஜீவா. இவரது தாய் கணவரை விட்டு பிரிந்து ஆத்தூர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த சிவாஜி என்பவரை வாழ்க்கை துணையாக்கினார்.
ஜீவா அரசை ஏமாற்றி ஆதிதிராவிடர் என ஜாதி சான்று பெற்றுள்ளார். அவர் கணவர் ஜங்கமர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். உண்மையான பூர்வீகத்தை ஆய்வு செய்ய வேண்டும். இவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என்று கூறி இருந்தனர்.
இதுபற்றி ஆத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரை கூறுகையில், வேட்பாளர் மீது இதுநாள் வரை இதுபோன்ற எந்த புகாரும் வந்ததில்லை. ஜாதி சான்று ஆவணங்களை குறித்து ஆய்வு செய்த பின் மனு ஏற்கப்படுவது வழக்கமான நடைமுறை. வேட்பு மனுவில் வழங்கப்படும் ஜாதி தொடர்பான ஆவணங்கள் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் தான் தி.மு.க. தலைமை ஜீவா ஸ்டாலினை மாற்றிவிட்டு சின்னதுரையை அறிவித்து உள்ளது.
