திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

 

தேர்தல் பிரசாரத்தில், உங்க புருஷன் வெளியூர் சென்றிருந்தாலும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு உண்டானது.

 

சர்ச்சையாகவும் காமெடியாகவும் பேசிவதில் புகழ்பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர். இயேசுநாதரைச் சுட்ட கோட்சே என்று ஒருமுறை கூறி சர்ச்சையில் சிக்கினார். பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று விழா ஒன்றில் மாற்றிக் கூறிய அமைச்சர் திண்டுக்கல் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார்.

 

தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை மறந்துவிட்டு, இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று இன்னொரு முறை ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய்’ என கூறி அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டிவி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என்று சொல்லி மிரள வைத்தார். திருக்குறளை அவ்வையார் எழுதினாரா என்று பொதுக்கூட்ட மேடையில் சந்தேகத்துடன் வினவினார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுவதோடு சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சலசலப்பையும் உண்டாக்கி வருகிறார்.

 

வரும் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குமரன் திருநகரில் திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பேசினார். அப்போது, “அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு 1 500 ரூபாய் தருவதாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் உங்கள் கணவன்மார்கள் எங்கு சென்றாலும், வெளியூர் சென்றாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்ல, அங்கு திரண்டிருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், நகர அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு பாதி கட்டணம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரோ, திண்டுக்கல் – பழனி இடையே இயக்கப்படும் வேகப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணம் குறைக்கப்படும் என்று வாக்குறுதி புரியாமல் மாற்றிக் கூறினார். சோலார் அடுப்பு பற்றி பேசியபோது, மண்ணெண்ணெய் ஊற்றாமல் என்று கூறுவதற்கு பதில் பெட்ரோல் ஊற்றாமல் அடுப்பை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் உளறினார்.

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன