
கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் பலி அதிகம் – நிதின் கட்கரி
கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது . ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய மக்கள் கொரோனா வைரஸுடன் போராடி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்க மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மக்களவையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது, போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “
கடந்த ஒரு ஆண்டில் சாலை விபத்துகளால் 1.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களோ 1.46 லட்சம் பேர். கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 35 வயது வரம்பிலானவர்கள்.சாலை விபத்துகளை குறைப்பது குறித்து எங்கள் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதனிடையே தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்தில் முதலிடம் பிடித்து வருகிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் 51,641 சாலை விபத்து பதிவுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் கர்நாடகா 40,644 எனும் எண்ணிக்கையில் உள்ளது.
