
தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!
மேற்கு வங்காள மாநில தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன.
கூச்பெகார் பகுதியில் நடந்த மோதலில் மத்தியபடை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது அந்த மாநிலத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி மத்திய படைகள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். மத்திய படையினர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு யாராவது நடந்தால் அவர்களை முற்றுகையிடுங்கள் என்றும் கூறியிருந்தார்.
இதனால்தான் மத்திய படையினரை திரிணாமுல் காங்கிரசார் முற்றுகையிட்டதாகவும், அது மோதலாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிந்ததாகவும் பாரதிய ஜனதாவினர் குற்றம் சாட்டினர்.
மேலும் ஒரு கூட்டத்தில் பேசும்போது மம்தா பானர்ஜி மத ரீதியாக கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமாக மம்தா மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ நக்வி தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 8 மணிமுதல் இன்று இரவு 8 மணிவரை 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதனால் அவருடைய இன்றைய தேர்தல் பிரசாரம் தடைபட்டது.

இதை எதிர்த்து மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதன்படி இன்று மதியம் கொல்கத்தாவில் உள்ள காந்திமூர்த்தி மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது காலில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்து வந்தார்.
இன்றைய தர்ணா போராட்டத்துக்கும் சக்கர நாற்காலிலேயே வந்தார். அந்த மைதானத்தில் உள்ள மதில்சுவரை ஒட்டி சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதற்கு கீழே மம்தா தன்னந்தனியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தர்ணாவில் ஈடுபட்டார்.

