
ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி அவலம்
உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உ.பி.,யில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிரிழந்துவிடுவார்கள்… ஆக்சிஜன் சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று போலீசார் முன் மன்றாடிய நபரின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நபர் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா கவச உடை (பிபிஇ கிட்) அணிந்த அந்த நபர் போலீசார் முன் மண்டியிட்டு,
தயவுசெய்து சார். நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன்? நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினருக்கு உறுதியளித்த பிறகு இங்கு வந்தேன்.
எனது அம்மா இறந்துவிடுவார். ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள். நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
அந்த நபர் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்த மருத்துவமனையில் இருந்து 2 பேர் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்கின்றனர் இது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
262 Views
