ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகிறது.

நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, மைலாடி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 27.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 3 வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறையாற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் இன்று 43.97 அடியாக உள்ளது. அணைக்கு 1688 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து மதகுகள் வழியாக 588 கன அடி தண்ணீரும், உபரி நீராக 368 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 64.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1406 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர் மட்டம் சரிந்து காணப்பட்டது. இதனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2 நாட்களாக கொட்டிய மழையின் காரணமாக முக்கடல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை 24.70 அடியாக உள்ளது.

அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கடல் அணை கடந்த மே மாதம் இறுதியில் முழு கொள்ளளவை எட்டியது. 4 மாதத்திற்கு பிறகு மீண்டும் நிரம்புகிறது. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அணை நிரம்புகிறது.

அணை நிரம்புவதையடுத்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

354 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன