
சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடந்த சங்க பொது குழு கூட்டம் சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நண்பகல் தொடங்கியது. அசோக் குமார் மரணம், கந்துவட்டி ஃபைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்கு தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிம்ம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்பட்ட நிலையில். எந்த ஒரு அலுவல்களும் நடக்காமல் பொதுக்குழு நிறுத்தப்பட்டது.
கடந்த 7ஆம் தேதி அதிருப்தி தயாரிப்பாளர்கள் சிலர் உயர்நீதி மன்றத்தில் இந்த பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரினர். அந்த வழக்கில் இந்த பொதுக் குழுக்கூட்டம் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் திரு ராமநாதன் முன்நிலையில் நடைபெறவும், கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு முறையே வாக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
முக்தா.வி . ஸ்ரீநிவாசன் , சி.வி ராஜேந்திரன் போன்ற மூத்தத் தயாரிப்பாளர்களை கௌரவித்த பின் பொதுக் குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பெருங்கூட்டமாக அதிருப்தி தயாரிப்பாளர்கள், தலைவர் விஷால் பாதியில் கூட்டத்தை நிறுத்தியதாக விஷாலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு வெளியே வந்தனர்.

கூட்டத்தில் இருந்து சேரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் நடிகர் டி.ஆர். ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கூட்டம் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.
சங்க கூட்டத்தில் நிர்வாகிகள் இல்லாமலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பொது குழுவில் புகார் தெரிவிக்க மைக்கை தரவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க விதிகளின்படி விஷால் செயல்படவில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? என்ற கேள்விக்கு விஷால் பதில் தரவில்லை. அரசை விஷால் எதிர்த்து உள்ள நிலையில் மானியம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிதி கணக்கை விஷால் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
