பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். கே.கோபால், போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அரசு கூடுதல் செயலாளர், போக்குவரத்துத் துறை, காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் மற்றும் அனைத்து மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2022 முதல் 13/01/2022 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16/01/2022 முதல் 18/01/2022 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 11/01/2022 முதல் 13/01/2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்திலிருந்து மேற் கூறிய பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
இவ்வாறு தமது பேட்டியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
537 Views

