ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீனவர்கள் மீள்வதற்குள் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் 19-ந்தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 55 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை ஜனவரி 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர்.
அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டு இலங்கை துறைமுகங்களில் உள்ள விசைப்படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை (22-ந் தேதி) தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்ததுவது.
வருகிற 31-ந்தேதிக்குள் 55 மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்டு ஜனவரி 1-ந்தேதி தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள், பொதுமக்கள் திரண்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களது 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இந்த தொழிலை சார்ந்துள்ள 15 ஆயிரம் மீன்பிடி குடும்பங்களும் வருவாய் இழந்து தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
போராட்டம் தொடரும் பட்சத்தில் மீன்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகி விடும். மேலும் வரத்து குறைவால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழில் பாதிக்கப்படும். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 102 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பிரதீப், வாசு ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும், அதில் சென்ற பிரதீப் (வயது28), அருண் (22), ஆகாஷ் (29), செல்லஞ்செட்டி (52), சரண் (24), முத்துவேல் (26), பழனி (38), அய்யனார் (50), எல்லப்பன் (48), ராம்குமார் (26), மணிகண்டன் (27), ராஜா (35), ராஜேஷ் (25), விஜயேந்திரன் (45) ஆகிய 14 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.
அவர்களை யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இதனால் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 1,200 மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

