புதன்கிழமை, மே 15
Shadow

பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியாது – ராகுல் காந்தி

 

பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இரண்டாக பிரிந்து உள்ளது.

ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாகவும் உள்ளது.

இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் மக்களாட்சி நடக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.

 

மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்.

மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள்.

சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும்வேளையில்

நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. எனது கருத்துக்களை விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல்,

‘அக்கறையுள்ள குடிமகனின்’ குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.

இந்திய இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள். ஆனால் உங்கள் அரசால் வேலை கொடுக்க முடியவில்லை.

2021-ல் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி கொள்கை, கொரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யப்படாதது போன்றவற்றால்

இந்திய மக்கள் தொகையின் 84% பேர் வருமானம் குறைந்துள்ளது.

 

‘1947ல் அடித்து நொறுக்கப்பட்ட’ மன்னர் ஆட்சியை தற்போது மீண்டும் ஆளும் பாஜக கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு.

அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை.

கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன்.

அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார்.

அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி.

 

இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது, நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள்.

இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களது வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது.

அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

 

314 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன