ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!
100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம்.
இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்… வெட்டு குத்து கலாட்டாக்கள்… கள்ள ஓட்டு புகார்… தேவையற்ற அலைச்சல்கள்… எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது.
தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் என்றும், 10 ஆயிரம் என்றும் வாரி வழங்கும் அரசியல் கட்சிகளின் அசிங்கமான கேலிக்கூத்தான ஜனநாயகத்தை இனியும் மக்கள் வேடிக்கை பார்க்காமல் பணத்தால் பதவியை வாங்க முயற்சிப்பவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

அல்லது தொகுதியை ஏலத்தில் விட வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை வெற்றி பெறுவதை விட ஈகோ பிரச்னையும், ஆட்சி பறிபோகும் என்ற பயமும் தான் அதிக சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் காரணமாகவே கடந்த முறை 89 கோடி பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததால் ரத்தான தேர்தல் இந்தமுறை 100 கோடியை தாண்டி பணப்புகார் எழுந்தும் சத்தமில்லாமல் ஆட்சியாளர்கள் துணையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது. ஒரு நாளில் மட்டும் சுமார் 40 லட்சரூபாய் உயர் மதிப்பு கரன்சி பிடிபட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்கும் எந்திர மனிதனாக இருக்கிறது. கருத்து கணிப்புகளின் படியும் தொகுதியில் உள்ள மக்களின் மனநிலையிலும் முதல் இடத்தில் தினகரனா, திமுகவா என்ற உண்மையை தெரிந்து கொண்டதால் ஏதாவது செய்து மீண்டும் தேர்தலை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்புகளிலேயே மிக கேவலமான நடைமுறைகளையும், முன்னேறுகளையும் தமிழக அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக அதிமுகவின் இப்போதைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள்.
அதில் ஒன்று நடிகர் விஷால் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைக்க பயன்படுத்திய யுக்தி. இதே சிக்கல் நாளை அவர்களுக்கே திரும்பி வரலாம். இனி இந்திய அளவில் எந்த ஒரு வேட்பாளரையும் இதே யுக்தியை பயன்படுத்தி தேர்தலில் நிற்க விடாமல் செய்ய முடியும். மிகவும் கேவலமான ஒரு முன்னுதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய அரசியலில் அழியா கறையாக காலம் காலத்திற்கு கேவலப்படும் விவகாரம் அது.
கோடங்கி
