
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவுப்புகள் தொடர்பான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள், சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து மாநில அளவில் ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிற மற்றும் துவக்கப்படவிருக்கின்ற திட்டங்கள் குறித்து ஆலோசிக்க பட்டதாகவும் கூறினார்.
கோவில்களில் உள்ள 9,857 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தமிழகத்தில் உள்ள மலைக் கோவில்களில் ரோப் கார்கள் பயன்படுத்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு பயிற்சி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 6 பயிற்சி பள்ளிகளை இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
இதுவரை 1,146 நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 753 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று கூறினார். தமிழகத்தில் 4 லட்ச ஏக்கருக்கும் அதிகமாக திருக்கோவில்களில் நிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களை முழுமையாக திரும்பப் பெற பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகத்தீஸ்வரர் கோவில் நிலங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் படியே இந்து சமய அறநிலையத் துறையும் நடக்கும் என்று கூறினார்.
