
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து விமர்சன கணைகளை தொடுத்து வரும் சிவசேனா, குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த முறை 115 தொகுதிகளில் வென்ற பாரதீய ஜனதா, இம்முறை 16 தொகுதிகளை இழந்தது. அதேவேளையில், காங்கிரஸ் 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது 61 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாரதீய ஜனதா வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சிவசேனா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக முறைமுகமாக தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா கட்சி கூறியிருப்பதாவது:- “ ஹர்திக் படேல் கூறியது உண்மையாக இருந்திருந்தால், பாரதீய ஜனதா, மோடிக்கு மட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் மாலை மரியாதை செலுத்த வேண்டும். குஜரத்தில் 100 தொகுதிகளுக்கும் குறைவாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்த போதிலும், மும்பையில் பாஜகவினர் கொண்டாடினர். இந்த வெற்றியின் உண்மையான அர்த்தத்தை அறியாமல் பாஜகவினர் கொண்டாடியுள்ளனர். ஆளும் கட்சி வெற்றி பெற எவ்வளவு மோசமாக பணிந்து செல்வார்கள் என்பதை இது காட்டுகிறது.
பாரதீய ஜனதா 151 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி எனவும் கூறி இருந்தனர். ஆனால், குஜராத் மக்கள் 100 தொகுதிகளை கூட பாரதீய ஜனதாவுக்கு அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
424 Views
