வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து  பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ராஜ்பவன் புறப்பட்டு சென்றார்.
சென்னை வருகை தந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
பொறியாளர்களின் உதவியால், நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  நாட்டில் அனைவருக்கும் பிடித்த முதல் குடிமகனாக இருந்தார் அப்துல்கலாம். கலைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
முன்னாள் முதல்-அமைசர்கள் தமிழகத்தின் மரபுகளை கட்டிக்காத்து பெருமை சேர்த்துள்ளனர். அண்ணாதுரை,காமராஜர், எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். மாமல்லபுரத்திலுள்ள சோழர்,பல்லவர் கால கட்டட சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
356 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன