சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

பிள்ளையார் சுழி போட்ட வேலூர் எம்.பி மீண்டும் அதிமுகவில் அணி தாவல் ஆரம்பம்

 


அதிமுகவில் இனி அணி தாவல் ஆரம்பம்.. பிள்ளையார் சுழி போட்ட வேலூர் எம்.பி செங்குட்டுவன்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பதை அடுத்து மீண்டும் அதிமுக அணியில் இருந்து தினகரன் அணிக்கு தாவ பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 21ம் தேதி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடங்கியது முதலே பரபரப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரனே முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்று முடிவடைந்த போதே, அதிக வாக்குகள் வித்தியாசம் இருந்ததால், அப்போதே தினகரனின் வெற்றி உறுதியாகி விட்டது. தற்போது இறுதியாக அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ள நிலையில், டி.டி.வி தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதை அவரது அணி தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி மக்கள் டி.டி.வி தினகரன் பக்கமே இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. சுயேச்சையாக போட்டியிட்ட போதே ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுகவை பின் தள்ளி உள்ளார் டி.டி.வி தினகரன். இதனால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணியில் இருந்து மீண்டும் பலர் டி.டி.வி தினகரன் அணிக்கு தாவலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது


கடைசியாக கடந்த நவம்பர் 29ம் தேதி அணி மாறிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் வேலூர் எம்.பி செங்குட்டுவனும் ஒருவர். இதனையடுத்து தினகரன் அணி மொத்தமாக உடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.இந்நிலையில், ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை பின்னுக்குத் தள்ளி டி.டி.வி தினகரன் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் , பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தினகரன் அணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அதை வெளிப்படுத்தும் விதமாக பலரும் அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி வருகின்றனர். அந்த அணி தாவலுக்கு வேலூர் எம்.பி செங்குட்டுவன் முதல் பிள்ளையார் சுழியை போட்டு ஆரம்பித்து வைத்து உள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்த செங்குட்டுவன், தனது ஆதரவை தினகரனுக்கு தெரிவித்து உள்ளார். மேலும், பல எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் விரைவில் அணி மாறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

 

269 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன