
தி.நகர் ரெயில் நிலையம் – பஸ் நிலையம் இணைக்கும் வகையில் பயணிகள் நடை மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் மிகப்பெரிய வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது.இங்கு ஜவுளி, நகை,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்ள ரெங்கநாதன் தெரு,மேட்லி சாலை,உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் திருவிழா கூட்டம் போல் மக்கள் தினமும் அலைமோதி வருகின்றார்கள்.
புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியது.
இதற்காக தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடை மேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
30 அடி உயரத்தில்,14 அடி அகலத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் கடந்த 3 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் இந்த பணிகள் சிறிது தடைபட்டது. அதன்பின் கடந்த ஆண்டு இப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
தி.நகர் ரெயில் நிலையம் – பஸ் நிலையம் இடையே இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மேற்கூரைக்கான இரும்பு கூண்டு அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் தி.நகர் ரெயில் நிலையத்தில் பாலம் இணைப்பு பணியும், தி.நகர் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி செல்லும் படிக்கட்டுகள் பணியும் நிறைவடையாமல் உள்ளன.
மேற்கூரை கூண்டுகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதையொட்டி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நடை மேம்பாலம் திறக்கப்படும் போது தி.நகரில் ஏற்பட்டு வரும் பெரும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.பயணிகள், பொதுமக்கள் எளிதில் தி.நகர் வந்து செல்வார்கள்.
