ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

வைரலாகும் ‘1947- ஆகஸ்ட் 16’ பட டீசர்!

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார்.

விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார்.

இதற்கிடையில் ‘ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.

இவர் தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘ரங்கூன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.

அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் ‘1947- ஆகஸ்ட் 16’ படத்தின் டீசரை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், சுதந்திரத்திற்காக போராட்டம், ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தி, சுதந்திர தின சிறப்பு என குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

281 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன