
நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது.
இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர்.
இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுபற்றி அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.
