புதன்கிழமை, ஜூலை 9
Shadow

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.

தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 241 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார்.

அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியபோது, ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்றார்.

இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். விமானத்தின் வால் பகுதியில் கறுப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும்.

விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

25 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன