வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

அழுந்த பதிய மறுக்கும் ஸ்கெட்ச் – விமர்சனம்

தவணையில் எடுக்கும் வண்டிகளுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு எடுத்து வரும் கேரக்டர் விக்ரம்.
அப்படி வண்டி எடுக்கப்போன இடத்தில் தமன்னாவை பார்க்கிறார்… பக்கென காதல் பற்றிக்கொள்கிறது… அடிதடியில் இருக்கிற விக்ரம் ஐயர் பெண் தமன்னா காதல் கைகூடியதா… வில்லன்கள் என்ன செய்கிறார்கள்… யார் வில்லன் என்பதுதான் ஸ்கெட்ச் கதை.
ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.
விக்ரம் நடிப்பில் பல இடங்களில் அவரது முந்தைய பட சாயல் அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து போகிறதை தவிர்க்க முடியவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் தமன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ், அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். சூரியின் காமெடி ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.
ஒரு கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சந்தர். விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு, எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை.

தமன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். குறிப்பாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் தனித்துவம் பெற்றிருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

குறையில்லாமல் இருக்குமா… படத்தில் பல குறைகள் இருந்தாலும் கிளைமாக்சில் மிக முக்கியமான சமூக அக்கறையுடன் இயக்குனர் விஜய்சந்தர் சொல்லும் செய்திக்காக குறைகளை மறந்து போகலாம்.
ஸ்கெட்ச் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அழுத்தமாக பதிந்திருக்கும்…!

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன