
கிராம கோயிலில் தாத்தா புதைத்து வைத்த விலைமதிக்க முடியாத புதையலை ஆள் வைத்து கொள்ளை அடிக்கும் அர்தபழைய கதைதான் என்றாலும் முழுக்க முழுக்க காமெடியாக முயற்சிக்கிறது குலேபகாவலி டீம்.
சிலை திருடும் பிரபுதேவா கும்பல், சின்னசின்ன 420 வேலைகளில் ஈடுபடும் ஹன்சிகா, அசந்த நேரம் ஆட்டைய போடும் ரேவதி கூட்டணி அமைத்து குலேபகாவலியை அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் ரேவதியின் கதாபாத்திர பெயர் மாஷா… அரங்கேற்றவேளை படத்தில் இதேபோன்று 420 வேலைகளில் ஈடுபடும் ரேவதியை அப்படியே வயசாக்கி ஏமாற்றுவதிலும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு நன்றிகடனோ என்னவோ ஒரு காட்சியில் அரங்கேற்றவேளை வி.கே.ராமசாமி படமாக வந்து போவார்.

பிரபுதேவா வழக்கமான துறுதுறு ரோல். டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என பல பரிணாமங்களில் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்.
ஹன்சிகா அழகாக வருகிறார். கவர்ச்சியாகவும், தங்கை பாசத்திலும் மாறுபட்டு காட்ட முயற்சிக்கிறார்.
பாடல்களில் இருக்கும் பிரமாண்டம், பாகுபலியைமிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகள் கதைக்கு தேவையில்லாத பட்ஜெட் எகிறும் யுக்திகளாக மட்டுமே காட்சியளிக்கிறது. அந்தளவுக்கு செலவு செய்ததற்கு கதையிலும், காட்சிப்படுத்துவதிலும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

வில்லனா காமெடியனா என கண்டுபிடிக்க முடியாத அளவில் மன்சூர் அலிகான், முனீஸ்காந்த். கூடவே தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யும் யோகிபாபு. வழக்கமான காமெடியனாக சத்யன்.
மொட்டை ராஜேந்திரனின் அலப்பறைகள் தனி ரகம். எலும்புக்கூட்டை அம்மா என நினைத்து ராஜேந்திரன் தரும் அலப்பறைகள் தியேட்டரை அதகளப்படுத்தும்.
பழைய கதையாக இருந்தாலும் இப்போதைக்கு தேவையான காமெடி கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
முழுநீள காமெடி என்றாலும் முழுவதும் ரசிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் காமெடி பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் புத்துணர்வுடன் இருக்கிறது. அதுபோல், மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இசையும், ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
