
பியூனாக வேலை பார்பவர் மகனோ மகளோ அதே ஆபீசில் ஆபீசாரக பதவிக்கு வரமுடியாது அதற்கு மேலதிகாரிகள் இடம்தராமல் சூழ்ச்சியால் தகுதியிருந்தாலும் தட்டிக்கழித்து விடுவார்கள் என்ற ஒரு வரியையும், அரசு வேலைகளில் சேர திறமையை விட லஞ்சம்தான் முக்கியம் என்ற ஒரு வரியையும் எடுத்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வடிவமைத்திருக்கிற படம்தான் தானாசேர்ந்த கூட்டம்.
அயன் படத்தில் பார்த்த அதே துறுதுறு சூர்யா. ரொம்ப ஜாலியாக வந்து போகிறார். பெரிய அலட்டல் உருட்டல் அடிதடி கலாட்டாக்களை தவிர்த்து மிக திறமையாக தன் கதாபாத்திரத்தை சூர்யா எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மூவ் நடக்கும்போதும் சூர்யா சிக்கிக் கொண்டார் என நினைக்க வைத்து அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சிவன்.

சூர்யாவுக்கு பொருத்தமான கதையாக தேர்வு செய்து அவரை அதற்கேற்றார்போல வேலைவாங்கி சூர்யா குட்வில் புத்தகத்தில் விக்னேஷ்சிவன் தனக்கென ஒரு பக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதேபோல, கீர்த்திசுரேஷ் கொள்ளை அழகு. இந்த அழகு எங்காவது 420 வேலை பார்க்குமா என நம் கண்ணே நம்ப மறுக்கும் சூழலில் அத்தனை அழகாக 420 மோசடி வேலையில் அமர்க்களப்படுத்துகிறார் கீர்த்தி.
ரொம்ப நாளைக் பிறகு ரம்யா கிருஷ்ணன். போலி என தெரிந்தும் மிடுக்கான சிபிஐ ஆபீசர் ஆகவும், குடும்ப பெண்ணாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களை தனக்கே உரிய ஸ்டைலில் ரம்யாகிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.

சிபிஐ வேலைக்கு ஆள் எடுக்க நேர்முக தேர்வு நடத்தும் சூர்யாவிடம் ஒரு பெண் “எனக்கு ஊழல், லஞ்சம் இதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலைக்கு வந்ததாக சொல்வார்” அவரிடம் சூர்யா பேர் கேட்க அவரோ… “சசிகலா” என பதில் சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது.
கொஞ்ச நேரமே வந்தாலும் ஆர்.ஜே.பாலாஜியின் வழக்கமான லொள்ளும் , யோகி பாபு காமெடியும் ரசிக்க வைக்கிறது.
முதல் காட்சியில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன், அடுத்தடுத்த காட்சிகளில் குடும்ப பெண்ணாக வலம் வந்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் செந்தில் ஓரளவுக்கு திருப்திபடுத்தி இருக்கிறார். கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

தம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
முதல் பாதியில் திரைக்கதையை மெதுவாக கொண்டு சென்றாலும், இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவை முற்றிலும் வேறு விதமாக காட்ட முயற்சித்திருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்களிடமும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார் விக்னேஷ்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக கார்த்திக் நடித்திருக்கிறார். இவரது கேரக்டரில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் ராமராஜன். ஏனோ அவர் விட்டதை கார்த்திக் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆல்பம் ஹிட்டடித்திருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.

அடிப்பது கொள்ளை என்றாலும் அந்த பணத்தை சூர்யா என்ன செய்கிறார் என்பதற்கு கிளைமாக்சில் பதில் கிடைக்கிறது. தானா ஒரு கூட்டம் சேர்ந்த நிலையில் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது தானாசேர்ந்த கூட்டம்..!
