
வித்தியாசமான ‘வரதட்சணை’ கேட்ட IAS அதிகாரி: நெகிழ்ச்சியில் மணமகள்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் IAS அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன்.
அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, IAS, IPS, IRS எனப் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள பெண்கள் வர தயாராக இருந்தனர். ஆனால், அவரோ “நான் ஒரு மருத்துவரைப் (Doctor) மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்” என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவருடைய ஆசைக்கேற்ப பெற்றோரும் ஓராண்டு காலமாகப் பெண் தேடினர். பல பெண் மருத்துவர்களின் வரன்கள் வந்தபோதும், சிவகுரு பிரபாகரன் விதித்த ஒரு விசித்திரமான நிபந்தனையைக் கேட்டுப் பலரும் திருமணத்திற்குத் தயங்கிப் பின்வாங்கினர்.
அப்படி என்ன நிபந்தனை? “என்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் மருத்துவர், வாரம் இரண்டு நாட்கள் நான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்!” என்பதுதான் அவர் கேட்ட வரதட்சணை.
பணம், நகை, கார் என எதையும் கேட்காமல், கிராமத்து ஏழை எளிய மக்களின் நலனை மட்டுமே வரதட்சணையாகக் கேட்ட அவரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார் சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியரின் மகளான மருத்துவர் Dr. கிருஷ்ணபாரதி.
இன்று அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட உன்னதமான ‘வரதட்சணையை’ மக்கள் சேவையாகக் கொடுக்க முன்வந்து, கிருஷ்ணபாரதி சிவகுரு பிரபாகரனாக இணைந்துள்ளார்.
உயர் பதவியில் இருந்தபோதும் தனது வேரையும், தான் பிறந்த மண்ணையும் மறக்காமல் மக்கள் சேவைக்காக யோசிக்கும் இதுபோன்ற அதிகாரிகளும், அதற்குத் துணை நிற்கும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
