சனிக்கிழமை, மே 30
Shadow

அமித்ஷா தலை மேல் தொங்கும் கத்தியாக போலி என்கவுண்ட்டர் வழக்கு… மும்பை ஐகோர்ட்டில் புது வழக்கு..!

குஜராத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்து விட்டது. இதேபோன்று, குஜராத், ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமித் ஷாவை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது மும்பை ஐகோர்ட்டில் மும்பை வக்கீல்கள் சங்கம் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
அதில், “இந்த வழக்கில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. முன்னணி புலனாய்வு அமைப்பு ஆகும். அப்படி இருக்கிறபோது, சட்டத்தின் ஆட்சியை தனது செயல்கள் மூலம் காட்டுகிற கடமை சி.பி.ஐ.க்கு உண்டு. அந்த கடமையில் இருந்து இந்த வழக்கில் சி.பி.ஐ. தவறி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.
இந்த பொது நல வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தர்மாதிகாரி, பாரதி டாங்கரே அமர்வில் 22-ந் தேதி முறையிடப்படும் என வழக்குதாரரின் வக்கீல் அகமது அபிதி தெரிவித்தார்.
போலி என்கவுண்டர் வழக்கு ஒரு நினைவலைகள்…

நவம்பர் 22, 2005
சொராபுதீன் சேக், அவரது மனைவி கவுசர் பீவி, இவர்களது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் ஆந்திர மாநிலம் ஜாகீராபாத்திலிருந்து ராஜஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 23, 2005
சொராபுதீனும் கவுசர் பீவியும் குஜராத்தில் உள்ள வல்சாத் மற்றும் பரூச் ஆகிய நகரங்களின் வழியாக திசா எனும் இடத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நவம்பர் 25, 2005
சொராபுதீன் மட்டும் அர்காம் எனும் இடத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

நவம்பர் 27, 2005
கவுசர் பீவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனவரி 14, 2006
விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், இந்த கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குஜராத் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 27, 2006
உச்சநீதிமன்றத்திலிருந்து மூன்றுமுறை வற்புறுத்தல்கள் வந்த பிறகே, குஜராத் காவல்துறை முதல்கட்ட விசாரணையை துவக்கியது.

டிசம்பர் 18, 2006
சொராபுதீனுடன் பேருந்தில் பயணித்த துளசிராம் பிரஜாபதியை உதய்பூர் சிறையில் அடைத்திருந்தார்கள்; அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் என்று செய்திகள் வெளியாகின; எனினும் அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

டிசம்பர் 27, 2006
சொராபுதீன் – கவுசர் பீவியை குஜராத் போலீசார் பண்ணைவீட்டிற்கு கொண்டுசென்றார்கள் என்பதை அறிந்த ஒரே சாட்சியமான துளசிராம் பிரஜாபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007
சொராபுதீன் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ருபாபுதின் ஷேக் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன்பின்னர் சொராபுதீன் கொல்லப்பட்டது போலியான என்கவுண்ட்டர் என்றும் 13 காவல்துறையினர் இதைச் செய்துவிட்டார்கள் என்றும் கூறி குஜராத் காவல்துறை ஒரு அறிக்கையை தாக்கல் செய்து முடித்துக் கொண்டது. அந்த 13 காவல்துறையினரில் குஜராத்தின் மூத்த அதிகாரிகளான டி.ஜி.வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்குவர்.

மே 5, 2007
கவுசர் பீவியின் உடல் இல்லோல் எனும் கிராமத்தில் எரிக்கப்பட்டுவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு தகவல் தெரிவித்தது.

ஜனவரி 12, 2010
சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 23, 2010
சிபிஐ விசாரணையைத் துவக்கி, குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தொடர்புகளை ஆய்வு செய்து, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஜூலை 25, 2010
அமித்ஷாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அக்டோபர் 29, 2010
அமித்ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

செப்டம்பர் 27, 2012
அமித்ஷாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதின்றம் தள்ளுபடி செய்தது; ஆனால் குஜராத்தில் இந்த வழக்கு நடப்பது பொருத்தமல்ல என்றும், சிபிஐ அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற புகாரை கணக்கில் கொண்டும் வழக்கை மகாராஷ்டிர உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது.

மே 2013
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன; இந்த வழக்கின் விசாரணை நீதிபதியாக ஜே.டி. உத்பத் நியமிக்கப்பட்டார்.

மே 2014
விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகள் துவங்கின. அனைத்து ஆவணங்களும் குஜராத் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், மராத்திக்கும் மொழி பெயர்க்கப்பட்டன.
ஜூன் 25, 2014 நீதிபதி உத்பத், மும்பை உயர்நீதிமன்றத்தில் புனே நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிபிஐ சிறப்பு நீதிபதியாக பிரிட்ஜ் கோபால் ஹர்கிஷன் லோயா நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 1, 2014
நாக்பூரில் நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார்.

டிசம்பர் 15, 2014
லோயாவைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிபதியாக எம்.பி. கோசவி நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 29, 2014
நீதிபதி கோசவி, அமித்ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்தார். அரசியல் காரணங்களுக்காகவே அமித்ஷா மீது சிபிஐ குற்றச்சாட்டுக்களை புனைந்துள்ளது என்று கூறி அமித்ஷாவை விடுதலை செய்தார். இதை பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டது.

ஜூலை 2016
அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 1, 2016
சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

 

 

 

410 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன