திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.
இதுதவிர மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜு ஷ்யாம், சுதன்ஷு பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்மா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 1987இல் – சிந்து பைரவி (தமிழ்), 1989இல் – ருத்ர வீணை (தெலுங்கு), 2009இல் – பழஸிராஜா (மலையாளம்), 2016இல் – தாரை தப்பட்டை (பின்னணி இசை) ஆகியன ஆகும். தற்போது நாட்டின் 2-ஆவது உயரிய குடிமகன் விருதான பத்மவிபூஷண் விருதை 2018-ஆம் ஆண்டுக்காக பெறுகிறார் இசைஞானி

364 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன