வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு திடீர் ஞானோதயம் ஏன்? – துணை முதல்வர் OPS கேள்வி

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்றார்.

“வளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும்  வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறைக்கு நிதிச்சுமை அதிகமானது. தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்து துறையின் மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்? தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது.

தமிழக அரசின் சுகாதார காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு “எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு” என பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன