
இது கொப்புறான் சத்தியமா பாலா படமில்லீங்கோ… நல்ல படம் நாச்சியார்
கோடங்கி விமர்சனம்
விடலை கற்பழிப்பு வழக்குகளில் வில்லங்கம் விவகாரம்… பணபலம்… அதிகார திமிர் எல்லாம் நிறைந்திருக்கும் குப்பை மேடில் வசிக்கிறவன் கோயிலில் உள்ள கருவறை சாமியை போலவும், கோயில் என்று சொல்லிக் கொண்டு வசிக்கும் கோபுரவாசியின் நடத்தை குப்பை மேட்டைவிடவும் கேவலமானது நெற்றிப்பொட்டில் பளீச்சென அடித்து தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் பாலா.
வழக்கமாக இயக்குனர் பாலா படங்கள் என்றாலே குரூரம், கோமாளித்தனம், சைக்கோத்தனம் அபத்தம் என அனைத்தும் நிறைந்திருக்கும்… தான் என்கிற ஆணவம் பல இடங்களில் எட்டிப்பார்க்கும்… ஆனால், நாச்சியார் அப்படியில்லை… ‘நரம்பை’ கட் பண்ணியதால்தான் இது பாலா படம் என்றே நம்மால் நம்ப முடிகிறது.

சைக்கோத்தனம் எங்கும் இல்லை… குரூரம் கொஞ்சமும் இல்லை… கதைக்கும் காட்சிக்கும் எந்த அளவு அழுத்தம் வேண்டுமோ அதை மட்டுமே அந்த கேரக்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்… பிரபல தயாரிப்பாளர்களான ராக்லைன் வெங்கடேஷ், தமிழ்குமரன் ஆகியோருக்குள் ஒரு நல்ல நடிகன் ஒளிந்திருப்பதை பாலா வெளிச்சப்படுத்தியிருக்கிறார்.

புதுமுகம் இவானா: குட்டிப்பெண்… அறிமுக நடிகை என்பதையே சொல்லித்தான் கண்டுபிடிக்க வேண்டும். பாலா பட்டறை என்பதால் கிடைத்த குளோசப் இடங்களில் எல்லாம் தேர்ந்த நடிகை இவானா என பேர் வாங்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் அத்தனை நளினம்… நீதிபதி முன்பு இருக்கிறோம் என்றே தெரியாமல் அங்கே வந்தும் கண்ணால் காதல் செய்து சைகையால் பேசும் வெகுளித்தனம்… சின்ன சின்ன கண்ணசைவுகள்… குழந்தையை பெற்ற குழந்தையாக அத்தனை வெகுளித்தனம்… ஜோதிகா கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் உடைந்து அழும் ஆற்றாமை… அடுத்த கணமே புகைப்படத்திற்கு சிரிக்கும் இயல்பு என இவானா நல்ல நடிகையாக வருவதற்கு நாச்சியார் நல்ல அடித்தளம்.

ஜோதிகா: மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரத் தேவையில்லை ஆனால்… கண்ணாடித் தொட்டி அழகு மீன் இல்லை நான் கடலில் திமிராக திரியும் சுறாவகை என நாச்சியார் கதாபாத்திரத்தில் குதறியிருக்கிறார் ஜோதிகா. டீசரில் பட விளம்பரத்திற்கு ‘அந்த’ வார்த்தையை மட்டும் வைத்து விட்டு படத்தில் மியூட் செய்தாலும் ஏற்கனவே கேட்ட வார்த்தை என்பதால் அந்த கெட்ட வார்த்தை சத்தம் இல்லாமல் இருந்தாலும் காதுகளில் அப்போதைக்கு ஒலிக்கத்தான் செய்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக அட்ராசிட்டி பண்ணும் ஜோதிகா விடலை வயசில் உள்ள பெண்ணுக்கு அம்மா ஆகவும் அசத்தியிருக்கிறார். இப்படி எல்லா போலீசும் இருந்து விட்டால் குற்றங்களே வெட்கப்படும் அல்லது பயப்படும் செய்வதற்கு… ‘கோயிலும் குப்பைமேடும் எங்களுக்கு ஒண்ணுதான்’ என்று ஜோதிகா பேசும் வசனத்தை மட்டும் கேட்டால் ஏதோ மதத்திற்கு எதிராக ஜோதிகா வார்த்தையை பயன்படுத்துவது போல தோன்றும்… படத்தோடு அந்த வசனத்தை பார்க்கிற போது குப்பைமேட்டில் இருக்கிறவன்தான் கோயிலாக மதிக்கப்பட வேண்டியவன்… கோயிலுக்குள் இருந்து கொண்டு குப்பையை விட மிக நாற்றமெடுக்கும் வேலையை செய்கிறவன் என்பதை சொல்லாமல் செருப்பெடுத்து அடித்து விளாசியிருக்கிறார் இயக்குனர் பாலா… கல்யாணத்திற்கு பிறகு ஜோதிகாவின் ரீ எண்ட்ரியில் இதுதான் பேர் சொல்லும் படம்.

அஜால் குஜால் படங்களில் மட்டுமே கலர் கலராய் பெண்களோடு கும்மாளம் அடித்து வந்த ஜீவி பிரகாஷ் முதல்முறையாக நடித்திருக்கிற படம் இது. அழுக்கு உடை பரட்டை தலை கிழிந்த டவுசர் என யதார்த்த உலகத்திற்கு போய் வந்திருக்கிறார் ஜிவிபிரகாஷ்.
இளையராஜா இசையில் தேவையான இடங்களில் சோகம்… தேவையான இடங்களில் ராகம்… ஒரே ஒரு பாடல் அதுவும் முழுசாய் இல்லாமல் எதிர்பார்க்க வைக்கும் இனிமை.
பாய் கல்யாண வீட்டையும், பணம் படைத்த சேட்டு குடும்பத்தையும் அதிகம் காட்டியதாலோ என்னவோ தேவையே இல்லாமல் கிறிஸ்தவ கிண்டலும், இந்து நையாண்டியும் பாலா படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
கடவுள் யார் என்பதை வெளிச்சம் போட்டு விட்டு வேண்டுமானால் புதுசாய் கடவுளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பஞ்ச் வசனமும் வைக்கிற இயக்குனர் திமிர் பாலாவுக்கு மட்டுமே உண்டு.
‘ஆத்தாளுக்கே தெரியாமல் அயோக்கியன் காமப்பசிக்கு ஆளான விடலை பருவப் பெண் பெற்ற குழந்தையை பார்த்து ‘புதிய இந்தியா பிறந்தது’ என்று வசனம் வைத்து மத்திய அரசின் தாரக மந்திரமான புதிய இந்தியா பிறப்பை இதைவிட யாரும் அவமானப்படுத்தி காட்சிப்படுத்த முடியாது… இந்த திமிரும் தைரியமும் பாலாவுக்கு மட்டுமே உரியது.

கதை என்னமோ ரொம்ப சின்னது… அதைவிட படத்தின் நீளமும் பாலாவின் முந்தைய படங்களைப்போல இல்லாமல் ரொம்பவே சின்னது… முக்கியமானது பாசிட்டிவ் ஆன கிளைமாக்ஸ்…
வக்கீலிடம் ‘தென்கலையா… வடகலையா’ என நீதிபதி கேட்டு அங்கேயும் தனது டிரேட் மார்க் நையாண்டியை அழுத்தமாக பதிக்கிறார் இயக்குனர் பாலா.
பாலாவின் சமீபத்திய படங்களின் தோல்விகளும், விமர்சனங்களும் அதனால் கிடைத்த அனுபவம்தான் இப்படி ஒரு படைப்பை கொடுக்க பாலாவை தயார் படுத்தியிருக்கிறது.
எடிட்டர் இன்னும் கொஞ்சம் கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்… நாச்சியார்2 உருவாகலாம் அதிலும் ஆணவ கொலை, கவுரவ கொலை விவகாரங்களை பாலா கையில் எடுக்கலாம் என்பதை சொல்லாமல் சொல்லி நாச்சியார் ஜோதிகாவுக்கு டிரான்ஸ்பர் கொடுத்து பார்ட் 2 எதிர்பார்ப்பு பல்சை எகிற வைத்திருக்கிறார் பாலா.
கடைசியாக இயக்குனர் பாலா… கொப்புறான் சத்தியமா சொல்றேங்க ‘நாச்சியார்’ பாலா படமே இல்லீங்கோ… ஆத்தா மேல சத்தியமா குல தெய்வ கோயில்ல கற்பூரம் அடிச்சி சொல்வேணுங்கோ இது பாலா படமே இல்லீங்கோ… அதனால பாலா படம்னு நினைச்சி படம் பாக்க போகாம ‘நாச்சியார்’ சினிமாவுக்கு போனா நல்ல படம் பாத்த திருப்தியோட திரும்புவீங்க…
பாலாண்ணே… உங்களுக்கு புண்ணியமா போகும்… அடுத்த படம் எடுக்க எவ்ளோ வேணா டைம் எடுத்துக்குங்க… குரூரம்… சைக்கோத்தனம்… அருவருப்பு இல்லாம ‘நாச்சியார்’ மாதிரி நல்ல படமா எடுங்க..!
-கோடங்கி
