
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. தீர்ப்பில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் காவிரி பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக பிப்ரவரி 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.
இந்த கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கங்களின் சார்பில் பங்கேற்க வேட்டவலம் மணிகண்டன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், கி.வீரமணி, திருமாவளவன், ஜி.கே.வாசன், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், ஜி.கே. மணி, ஜவாகிருல்லா, காதர் மொகிதீன், தமிமுன் அன்சாரி, சரத்குமார் செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி, கொங்கு ஈஸ்வரன், தனியரசு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது
