
பாடல் வெளியீட்டு விழாவில்
நன்கொடை பெற்ற விஷால்..!
இறைவன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் செல்வகுமார் தயாரித்திருக்கிற படம் ஒரு கனவு போல. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சவுந்தரராஜா இருவரும் ஹீரோக்களாகவும், அமலா என்ற அறிமுக ஹீரோயினும் நடித்திருக்கிறார்கள். விஜயசங்கர் இயக்கியிருக்கறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க செயலாளர் விஷால் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, நான் நடிகராகவோ, நடிகர் சங்க செயலாளராகவோ இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஒரு மனிதனாக வந்திருக்கிறேன். நாட்டில் விவசாயிகள் அழிந்து கொண்டே வருகிறார்கள். விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்காக நடிகர் சங்கம், பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் என எல்லா அமைப்புகளும் களத்தில் இறங்கயிருக்கிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இது தொடர்பாக பெப்சி தலைவர் செல்வமணியிடம் இப்போது பேசியிருக்கிறேன்.
நான் பொதுவாக இதுபோன்ற பாடல் விழாக்களுக்கு வருவதில்லை. இதில் ராமகிருஷ்ணனும், சவுந்தரராஜாவும் அழைத்தார்கள் அதனால் வந்தேன். விழாவில் பரிசு தருகிறோம் என்று சொன்னார்கள் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
என் படம் வெற்றி பெற்றால் விஷால் மட்டும்தான் தெரிவேன். இதுபோன்ற படங்கள் வெற்றிபெற்றால் பலர் வெளியில் தெரிவார்கள் என்றார் விஷால்.
அவர் பேசி முடித்ததும் பட தயாரிப்பாளர் செல்வகுமார், சவுந்தராஜா இணைந்து விஷால் செய்துவரும் சமுதாய பணிகளுக்கான நன்கொடையாக 25 ஆயிரத்தை வழங்கினார்கள்.
சினிமா பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு நடிகரின் சமுதாய பணிகளுக்கு ஒரு தயாரிப்பாளர் நன்கொடை தந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக பென்டிரைவ் மூலம் பாடல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
