சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் வைத்து நேற்று அஸ்வினி என்ற முதலாமாண்டு பி.காம். மாணவியை அழகேசன் என்ற இளைஞர் கொலை செய்தார். முதலில் அழகேசனின் ஒருதலை காதலை ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலை செய்த இளைஞர் அழகேசனும், கொலை செய்யப்பட்ட அஸ்வினியும் சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்கள். படிப்பு சரியாக வராததால், கிடைத்த வேலையைப் பார்த்த அழகேசன், தண்ணீர் கேன் போடுவது, மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவது என்று கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்துள்ளார். தந்தையை இழந்து வறுமையில் வாடிய அஸ்வினியின் கல்விச் செலவுக்கு அழகேசன் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது.
இவர்கள் இருவரின் காதலும் அஸ்வினியின் உறவினர்களுக்கு தெரிய வர, அவர்கள் அஸ்வினியை கண்டித்து அவர் மனதை மாற்றியுள்ளனர். இதனையடுத்து அஸ்வினி அழகேசனை தவிர்த்துள்ளார். இதனால் அஸ்வினியிடமும், அவரது அம்மாவிடமும் அழகேசன் தகராறு செய்ய, அஸ்வினியின் பெரியப்பா சம்பத் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அன்று மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்கு போலீஸார் அழகேசனிடம் இனி அந்த பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்று எச்சரித்து, அஸ்வினியிடமும் புகார் வாங்கியுள்ளனர். அஸ்வினி தனது புகார் மனுவில் தானும் அழகேசனும் காதலித்ததாகவும் தற்போது அதற்கு அவர் தகுதி இல்லாதவர் என்று தெரிந்து ஒதுங்கியதால் தொல்லை கொடுப்பதாகவும் இனி அவர் என் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது என்று எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலீஸுக்கு பயந்து சிறிது நாட்கள் அழகேசன், அஸ்வினியை தொந்தரவு செய்யவில்லை.
ஆனாலும் அஸ்வினியை மறக்க முடியாத அழகேசன், தனக்கு கிடைக்காத அவர் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கத்தியுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
கல்லூரி முடிந்து அஸ்வினி வந்தவுடன் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அழகேசன். அப்போது அஸ்வினி, நான் உன்னை மறந்துவிட்டேன். இனி என்னை தொந்தரவு செய்யாதே என்று கூறியவுடன் ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி தன் பழியைத் தீர்த்துக்கொண்டுள்ளார்.
கொன்ற பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று மண்ணெண்ணெயை ஊற்றி வந்த அழகேசனை பொதுமக்கள் பிடித்து அடித்ததில் அவர் கொளுத்திக்கொள்ள முடியாமல் போனது.
அஸ்வினியின் இந்த மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மாணவி அஸ்வினி கொலைக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ”சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல” என்றுள்ளார்.
மேலும் ”குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
