இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் பலர் அற்பாயுளில் இறந்து விடுவது அதிகரித்து வருகிறது. 24 மணிநேரமும் ‘காவலர்’களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது மனஅழுத்தம் அதிகம்: பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொ லைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்று கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளி வந்த நிலையில் தற்போதும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஆம்.. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது சமீப காலமாக உயர்ந்துகொண்டே போகிறது. இவர்களின் தற்கொலைக்குப் பணிச்சுமை முக்கிய காரணமாக உள்ளது என ஆய்வில் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சென்னை மெரீனா கடற்கரையில் போலீசார் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அயானவரத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்கரணையைச் சேர்ந்த காவலர் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதே சமயம் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், காவலர்களின் பணி மற்றும் மன அழுத்தம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 2016ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் (161 பேர்) உள்ளது. கேரளா மூன்றாம் இடத்தில் (61 பேர்) உள்ளது. சொந்தப் பிரச்சினை, மன அழுத்தம், பணிச்சுமை ஆகியவை காரணமாகக் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப்பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்படி, தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 216 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2012இல் தமிழகத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
