ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று தொடங்குகிறார்.
முன்னதாக கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் வேகமெடுத்த அவர், தினமும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த பொதுக்கூட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திருச்சியில் நடத்தவுள்ளதாக அவர் அறிவித்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(மார்ச் 8) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின விழாவை நடத்தினார். போக்குவரத்து சோதனையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ரூ. 7 லட்சம் அறிவித்துள்ள நிலையில், ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் கமல் அறிவித்தார். மேலும், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அவர் பேசியிருந்தார்.
அத்துடன், பெரியார் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு அல்லாமல், காவிரி விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது என்றும் விமர்சித்திருந்தார். இவ்வாறு தனது அரசியல் செயல்பாடுகளில் வேகம் காட்டிவரும் கமல்ஹாசன். தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.
அதே சமயம் நேற்று மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (India Today Conclave) பேசிய கமல்ஹாசன், “நான் எனக்கான நேரத்தை வாழ்ந்து முடித்து விட்டேன். தற்போது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறவே முயற்சி செய்வோம். பணம் சம்பாதிக்க நான் அரசியலில் இறங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் எனக்கானது இல்லை; மக்களுக்கான கட்சி. அரசியலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இனி எனக்கு இல்லை. என் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்தபடியே இறக்க விரும்புகிறேன்.

நான், தி.மு.க தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின் அரசியலில் நான் ரசிக்கின்ற விசயங்கள் அதிகம் உள்ளது. அதனாலேயே அவர்களைச் சந்தித்தேன். விரைவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வையும் சந்திக்க உள்ளேன். நான் பாஜக-விற்கு எதிரானவன் இல்லை, மக்களுக்கு எதிராகச் செயல்படும் அனைத்துக் கட்சி, பிராண்ட் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்துக்கும் எதிரானவன். வருங்காலத்தில் ஒருவேளை எனது கட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் நான் எனது கட்சிக்கும் எதிரானவன்” என்று தெரிவித்திருந்தார்
மேலும் இன்று மதியம் அவினாசிக்கு அவர் செல்கிறார். பின்னர் பெருந்துறையில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து பேசும் அவர், அதன்பின்னர் மாமரத்துப்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியைத் திறந்து வைக்கிறார். மீண்டும் மாலையில் கார்நிஷ் பார்க் ஹோட்டலில் தனது கட்சி உறுப்பினர்களை அவர் சந்திக்கவுள்ளார். நாளைக் காலை மொடக்குறிச்சி செல்லும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். அதன்பின்னர், வீரப்பன் சத்திரம், சித்தோடு, கவுண்டம்பட்டி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, பெரிய அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
