சனிக்கிழமை, மே 30
Shadow

நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!

எக்கச்சக்கமான  சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி முதலிடத்திலும் திமுக, அதிமுக ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் வகிப்பதாக ஏடிஆர் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமான புள்ளிவிவரங்களை டெல்லியைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்( Association for Democratic Reforms (ADR) என்னும் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் மாநில கட்சிகளின் சொத்துகளின் வரவு செலவு கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை ஏடிஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, சமாஜ்வாதி, தேமுதிக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவ சேனா உள்ளிட்ட 22மாநிலக் கட்சிகளின் 2011-12க்கான சொத்து மதிப்பையும், அவற்றின் கடந்த வருட ( 2015-16) சொத்து மதிப்பையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிக சொத்துக்கள் கொண்ட கட்சியாக உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி திகழ்கிறது. 2011-12ஆம் ஆண்டில் 211.01 கோடியாக இருந்த அக்கட்சியின் சொத்து மதிப்பு தற்போது 634.91 கோடியாக இருக்கிறது. அதற்கடுத்த இடம் வகிக்கும் திமுகவின் சொத்து மதிப்பு 81.28 கோடியிலிருந்து 257.18கோடியாக அதிகரித்துள்ளது.

87.97கோடியாக இருந்த தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் சொத்து மதிப்பு 224.84ஆக அதிகரித்துள்ளது. நான்காவது இடத்திலுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் சொத்து மதிப்பு 11.53கோடியிலிருந்து 57.63 கோடியாக அதிகரித்துள்ளது. ஐந்தாவது அஜித் சிங்கினுடைய ராஷ்டிரிய லோக்தளம் கட்சி உள்ளது.

இதற்கிடையில் இதே காலகட்டத்தில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி ரூ.15.97 கோடியும், தெலுங்கு தேச கட்சி ரூ.8.18 கோடியும் கடன்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்கள் மார்ச் 09ஆம் தேதி ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது. அனைத்துக் கட்சிகளும் தாங்கள் பெறும் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன