தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11) இரண்டாவதுகட்டமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு 14ஆவது வருடமாகப் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் இரண்டுகட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்கு முதல் தவணையாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை மாநிலம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 43,051 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் இன்று ஈடுபட உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களிலும் இன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும். மேலும், முகாம் நாளான இன்று தொலைதூரம் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் என 1,652 பயணவழி மையங்களிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து முறையாகக் கொடுத்திருந்தாலும் இன்று நடைபெறும் இரண்டாவது தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்து குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ள வேண்டும். எனவே, ஐந்து வயது வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து போட அழைத்துச் செல்லுங்கள்..
