சனிக்கிழமை, மே 30
Shadow

பட்ஜெட் பழசு!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கமெண்ட்

‘முதலில் தோன்றும் குறளைத் தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல்’ என நடிகர் கமல் ஹாசன் பட்ஜெட் குறித்த தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று (மார்ச்.15) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இதனை தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் குறித்து பலரும் கருத்து கூறி வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலில் தோன்றும் ‘குறளை’ தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல். தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்களுக்கான திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை. ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் ரூ.45,000. எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய தமிழகத்தை ஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்ய வேண்டி இருந்தன.  ஆதலால் இந்த தாமதம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

265 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன