திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவரின் மனைவி நேஹா நேற்றிரவு (மார்ச் 21) ட்விட்டரில், “திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விடக் கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
சில மணிநேரங்களில் இந்தப் பதிவை நீக்கிய அவர், பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், “நான் வெளியிட்ட கருத்துகள் எனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் அல்ல. எனது கணவருடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களின் ஒரு சிலரது நடவடிக்கைகள் அதிருப்தியடையச் செய்துள்ளது. சில ஹீரோயின்கள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் தலையிட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாக கருத்துக் கூறினால் ‘லீக்’ என்ற வார்த்தையால் சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் பிறரின் கவனத்தை ஈர்க்கவோ, நாடகமாகவோ பதிவிடவில்லை. எனது கணவருடன் எனக்கு பிரச்சினை என்பது போன்ற கருத்துகள் வந்ததாலும், சர்ச்சையைக் கிளப்பும் என்பதாலும் நான் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன். இருப்பினும் இது நான் குறிப்பிட்ட, அந்தப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூக வலைதளங்கள் எத்தனைச் சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். நேஹாவின் ட்விட்டர் பதிவு திரையுலகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
