ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது, இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.

மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு தி.மு.க.வின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி விடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.
இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும்..
மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும் வெகுமக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென இந்த மாநாடு மத்திய-மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது.. இவ்வாறு பேசினார்.
