ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தாஜ்மஹால் யாருக்கு சொந்தம்? – உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

தாஜ் மஹாலை சொந்தம் கொண்டாடும், உத்தர பிரதேச மாநில, சன்னி வக்ப் வாரியம், ஷாஜஹானின் கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை, மொகலாய அரசர் ஷாஜஹான், தன் மனைவி, மும்தாஜுக்காக கட்டினார். இதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில், தாஜ் மஹால் சென்றது. சுதந்திரத்துக்கு பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது, இந்திய தொல்லியல் துறை, தாஜ் மஹாலை பராமரித்து வருகிறது.

இந்நிலையில், தாஜ் மஹால், தங்களுக்கு சொந்தம் என்றும், அதன் பராமரிப்பு பணியை, மொகலாய வம்சாவளியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உ.பி., மாநில, சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரியது.

கடந்த, 2010ல், வக்ப் வாரியத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, இந்திய தொல்லியல் துறை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

“நினைவுச் சின்னமான தாஜ் மஹால், மொகலாய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், ஆங்கிலேயர் வசம் சென்றது. விடுதலைக்குப் பின், இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. தன் மகன், அவுரங்கசீப்பால், 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட ஷாஜஹான், எப்போது, வக்ப் வாரியத்துக்கு தாஜ் மஹாலை எழுதித் கொடுத்தார்? ஷாஜஹான், தன் கைப்பட எழுதி, கையெழுத்திட்ட ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள், வக்ப் வாரியம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

307 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன