ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அத்துடன் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம்.

இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால் மதிப்பெண், பணம், அரசு வேலை எளிதில் கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினாராம்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 19-ல் கல்லூரி நிர்வாகத்திடம் உதவிப் பேராசிரியை மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி மார்ச் 21-ல் அவரை பணியிடை நீக்கம் செய்தது.  இந்நிலையில், உதவி பேராசிரியை மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசாந்த், இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான நிர்மலாராணி மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவிகளிடம் தவறான நோக்கில் பேசிய உதவிப் பேராசிரியை குறித்து கல்லூரியில் திங்கள்கிழமை கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா மற்றும் வட்டாட்சியர் சிவகார்த்திகாயினி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவி வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்லிடப்பேசி மூலம் அவர், வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வெளிக்கதவு மற்றும் வீட்டின் உள்புறமாக பூட்டியிருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீஸார், அவரது உறவினர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நிர்மலாதேவிக்கு தெரியப்படுத்தினர். பின்னர் வேறு வழியின்றி உதவிப் பேராசிரியை கதவை திறந்து வெளியில் வந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர்.

 

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என கூறப்பட்டு இருக்கிறது

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன