முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுனருடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து வேறு ஒரு நபர் பதிந்திருந்த கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிபடுத்தும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஜநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுகிற பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை அள்ளி வீசிய எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னையிலுள்ள எஸ்.வி சேகர் வீட்டை முற்றுகையிட்டு அவரின் இழி செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். தொடர்ந்து எஸ்.வி சேகர் வீட்டின் மேல் கல் எரிந்தும் தங்களது எதிர்ப்பினை பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தது காவல்துறை.
அடிசினல் செய்தி:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் அருவருக்கத்தக்க வகையில் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த கனிமொழியை சாடும் விதமாக ஹெச்.ராஜா தரந்தாழ்ந்த இந்த விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கேவலமாக, கீழ்த்தரமாக விமர்சித்த பதிவு ஒன்றை தன்னுடைய முகநூல் பக்கதில் பகிர்ந்திருந்தார். இதற்கு பத்திரிகை யாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், பத்திரிகையாளர் களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச்.ராஜாவுக்கு எதிராகவும், கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக தலைமை அலுவலகமான கமாலயத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த பத்திரிகையாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, பத்திரிகையாளர்களை குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை தரக் குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச். ராஜா-விக்ரு எதிராகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெயில் பீஸ்:
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்துக்க்கு எஸ்.வி.சேகர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தை அடுத்து, பாஜக நிர்வாகியும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுயிருந்தார். இதற்கு கண்டன குரல்கள் எழவே, உடனே அந்த பதிவை அவர் பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.
இதனையடுத்து, அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ்.வி.சேகர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எனது நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். சற்று நேரத்தில் என் நண்பர் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார். உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது. அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
261 Views