
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் பங்கேற்க வந்த டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னால் இருந்து இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தமிழக ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக உள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. அதுவரை இங்கு என்ன போராட்டம் நடந்தாலும் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இங்கு உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நடிகை தமிழகம் ஒரு கண் என்றால், கர்நாடகம் இன்னொரு கண் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் தமிழக மக்களின் சோற்றில் மண் அள்ளி போட்டு விடக் கூடாது.
தமிழகத்தில் தற்போது மக்கள் எதிர்க்கக்கூடிய திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் போன்றவற்றிற்கு அனுமதி அளித்தது தி.மு.க. கூட்டணி கட்சியினர்.
திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு இப்போது மனிதச்சங்கிலி, உரிமை மீட்பு பயணம் நடத்துகிறார்கள். இது எப்படி? இருக்கிறது என்றால், நீங்கள் அடிப்பது போல் அடியுங்கள், நாங்கள் அழுவதுபோல் அழுகிறோம் என்பது போல் உள்ளது.
நான் கொள்கைக்காக அரசியல் நடத்துகிறேன். எனவே தவறு யார் செய்தாலும் அதை லட்சிய தி.மு.க. சுட்டிக்காட்டும். நடிகர் கமல்ஹாசன் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவர், கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்கே சில காலம் ஆகுமென்று கூறி இருக்கிறார். அரசியலில் கமல்ஹாசன் தாக்குப்பிடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது பெரும் குற்றமாகும். இதில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
