
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து தீர்ப்பு நாளை மாலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
