சனிக்கிழமை, மே 30
Shadow

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது – டி.எம்.ஜே.ஏ கண்டனம்

 

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் ஊடகத்துறை சமீப காலமாக அரசுகள், அதிகார வர்கத்தால் கடும் தாக்குதலை சந்தித்து வருகிறது.

தூத்துக்குடியில் மக்கள் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அறவழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த மக்கள் எதிர்ப்பு 100வது நாளை தொட்டதால் அதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறவழியில் மக்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை தன் அடக்குமுறையை மக்கள் மீது செலுத்தியது.

அறவழியில் சென்ற மக்களை தடியடி நடத்தி போலீஸ் கலைக்க முயற்சித்ததில் ஏராளமான அப்பாவி மக்கள் தாக்கப்பட்டனர்.

இதில் தமிழக காவல்துறை அடக்குமுறையின் உச்சமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 11 அப்பாவி மக்கள் பலியானார்கள்.

இந்த சம்பவங்களை படம் பிடித்த ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர்கள் உட்பட பல செய்தியாளர்கள் கேமராமேன்கள் தாக்கப்பட்டு காமிராக்கள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டிதன செயலை தமிழ் மூவீ ஜர்னலிஸ்ட் அசோசியேசன் கடுமையாக கண்டிக்கிறது.

மக்கள் அறவழி போராட்டத்தை கலவரமாக சித்தரிக்க முற்படும் தீய சக்திகள் எதுவாக இருந்தாலும் அதற்கு துணை போகும் அனைவருக்கும் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மக்களுக்கு உரிய இழப்பீடு அறிவிப்பதோடு, துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை நடத்தும் காட்டுமிராண்டி தன தாக்குதலை வேடிக்கை பார்க்காமல் அதிகார மமதையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன