
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். எனவே பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வந்தனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்றும், இதற்கான இறுதி கட்ட முகாம் 14-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி, பத்மபிரியா, பெலிக்ஸ்ராஜா, செம்மலை, வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.
