
டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விபரங்கள் கீழ்வருமாறு:-
மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு என இருவருமே பொறுப்பு.
மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது.
சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது.
எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்.
துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரங்கள் கிடையாது.
எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை. நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு.

காவல், பொது அமைதி ஆகிய விவகாரங்கள் மட்டும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட் பட்டது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு புதுச்சேரியில் நிலவும் அதிகாரப்போட்டிக்கும் தீர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவையிலும் முதல்வர் நாராயண சாமிக்கும் துணை நிலை ஆளுநர கிரண்பேடிக்கும் தொடர் மோதல் போக்கு நீடிக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த தீர்ப்பு தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளால் வரவேற்க்கப்படும். இங்கும் கவர்னர ஆய்வு நடத்தும் செயல் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அதோடு கவர்னர ஆய்வு குறித்து விமர்சித்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரிக்கை அறிக்கை சமீபத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
