ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!

வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாக இருக்கும் தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சிபிஐ உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சிபிஐ கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் விரைந்துள்ளனர்

296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன