பானுப்பிரியா வீட்டு வேலைக்கார சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்… சிறுமியும், தாயும் திருட்டு வழக்கில் கைது

குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோவின் கீழ் நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபியும் ஆந்திர போலீசாரால் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர்.

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சந்தியா என்ற சிறுமியை அவரும் அவரது சகோதரரும் உடல் ரீதியாக தொந்தரவுகள் செய்வதோடு, சம்பளம் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் சந்தியாவின் தாயார் பத்மாவதி புகார் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து சந்தியாவின் மீது திருட்டுக் குற்றம் சாட்டிய பானுப்ரியா, சந்தியாவுக்கு வயது 14 தான் என்பது தனக்குத் தெரியாது என்று மழுப்பினார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை மீட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்படுத்தினார்கள். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பானுப்ரியாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க, ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 14 வயதுடைய சிறுமியை வீட்டில் வேலை அமர்த்தியது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதையொட்டி, நடிகை பானுப்ரியா எந்த நேரத்திலும் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக, பானுப்ரியா நிரபராதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் குற்றவாளிகளாகிவிட்டனர். வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று (பிப்ரவரி 1) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் கொடுத்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சென்னை பாண்டி பஜார் காவல்துறையினர் சிறுமியையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். தற்போது சிறுமியின் தாயார் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *