வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டியராஜன், டி.பி. கஜேந்திரன், நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி, நாட்டுபுறப் பாடகி பரவை முனியம்மா, திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2014ம் ஆண்டுக்காக, நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்காக, திரைப்பட இயக்குநர் ஏ.என். பவித்ரன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, பின்னணிப் பாடகர் கானா பாலா, நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுடன், பல்வேறு கலைத்துறை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டுக்காக, நடிகர்கள் சசி குமார், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, நாட்டுப்புறப்பாடகர் கலாராணி உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்காக, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, இசையமைப்பாளர் யுவச் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கலைஞானம், புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி உள்ளிட்ட 28 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்காக, நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பின்னணிப் பாடகர் உன்னி மேனன் உள்ளிட்ட, பலதுறை சார்ந்த 34 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்பிரிவில் எஸ், ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்திமாலா பாலி, வி.பி. தனஞ்செயன், சி.வி.சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் கலை வித்தகர்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு சான்றிதழுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன