கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம்

31 Views

தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்து ‘மாயவன்’ என்ற ஹிட் படத்தை கொடுத்த சி வி குமார், தனது அடுத்த படைப்பாக ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

‘A’ தர சான்றிதழுடன் இன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

நாயகி ப்ரியங்கா ரூத் (ஜெயா), இரு தங்கைகளுடன் அழகான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் அசோக்(இப்ராஹிம்) மீது காதலில் விழுகிறார் நாயகி.

இந்த விஷயம் ஜெயாவின் வீட்டிற்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஜெயா என்ற தன் பெயரை ரசியாவாக மாற்றிக் கொண்டு இப்ராஹிமை திருமணம் செய்து கொள்கிறார்.

மெட்ராஸின் தாதாவாகவும், போதை பொருள் கடத்தல் மன்னனாகவும் வரும் வேலு பிரபாகரனிடம் வேலைக்கு சேர்கிறார் அசோக். சில நாட்களிலேயே அசோக்கை போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுகின்றனர்.

தனது கணவனை கொல்ல காரணமாக இருந்தவர்களை பழிவாங்க நினைக்கிறார் ரசியா. இதற்காக, பம்பாயில் ரெளடியான பாலாஜியிடம் சென்று தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். பின், சென்னை வரும் ரசியா, எதிரிகளை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மொத்த கதையும் நாயகி ப்ரியங்காவை சுற்றியே நகர்கிறது. தனி ஒரு பெண்ணாக மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார் நாயகி ப்ரியங்கா ரூத். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் மிரட்டி எடுத்திருக்கிறார். ரியல் ஆக்‌ஷன் காட்சிகளை கண்முன்னே நிறுத்திவிட்டார். கோலிவுட்டில் இவருக்கான ஒரு இடம் உருவாகி விட்டது.

தனது கேரக்டரை பெர்பெக்டாக செய்திருக்கிறார் அசோக். வழக்கம்போல், தனது ரோலை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் பாலாஜி. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பார்த்த அதே வில்லத்தனத்தை இப்படத்திலும் பாலாஜி கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.

இயக்குனர் வேலு பிரபாகரன், வில்லனாக நடித்து அனைவரையும் உறைய வைக்கிறார். முதல் காட்சியிலேயே தனது கேரக்டருக்கு உயிர் கொடுத்து அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கிறார்.

அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் கைகளில் கேமரா விளையாடியிருக்கிறது. படத்தில் முதல் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவும், இரண்டாம் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவையும் கொடுத்து நம்மை காட்சியில் கட்டிப் போட்டுவிட்டார் ஒளிப்பதிவாளர். கோலிவுட்டில் தனக்கென ஒரு முத்திரையை நிச்சயம் பதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இசையமைப்பாளர் ஹரி டபியூசியாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் ‘ஆகாயம் சுடுதே’ ரிப்பீட் மோட். பின்னனி இசை, கதையின் நகர்வோடு இணைகிறது.

பலரை இயக்குனராக, நடிகராக உருவாக்கிவிட்ட பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் சிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
மேக்கிங், ஒளிப்பதிவு,எடிட்டிங், சவுண்ட், நடிகர்கள் என அனைத்தும் “கேங்” ஆக சேர்ந்து படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

வன்முறை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரசனைக்கு உரிய சினிமா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *